பண்டிகை காலத்தை முன்னிட்டு தனித்துவமான அம்சங்களுடன் கூடிய டொயோட்டா யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
புதிய மாடல்
மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் டொயோட்டா யாரிஸ் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனினும், அண்மையில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. போதாக்குறைக்கு, மாருதி சியாஸ் காரும் கடும் போட்டியை தந்து வருகிறது. இதனால், டொயோட்டா யாரிஸ் நெருக்கடியில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கவர்ச்சிகரமான அம்சங்களுடன் யாரிஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடலை டொயோட்டா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
பிளாக் எடிசன்
‘டொயோட்டா யாரிஸ் பிளாக் எடிசன்’ என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர உள்ளது. பெயருக்கு தக்கவாறு க்ரில் அமைப்பு, பம்பர், பானட், ரியர் வியூ மிரர்கள், பில்லர்கள் ஆகியவை பிரத்யேக கருப்பு வண்ண பூச்சுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், சாதாரண யாரிஸ் காரிலிருந்து, இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் தனித்துவமாகவும், அதிக கவர்ச்சியாகவும் இருக்கும். இந்த காரில் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் அலங்கார பாகங்களுடன் வசீகரிக்கிறது. புதிய டிசைனிலான 15 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லிமிடேட் எடிசன் மாடலில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
அதிக மைலேஜ்
1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 106 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தக் காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.8 கி.மீ. மைலேஜையும், சிவிடி மாடல் லிட்டருக்கு 18.10 கி.மீ. மைலேஜையும் வழங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. டொயோட்டா யாரிஸ் கார் ஜே, ஜி, வி மற்றும் வி.எக்ஸ். ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.