மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சூடுபிடித்து அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரியா சக்ரபோர்த்தியின் தந்தை ‘வாழ்த்துக்கள் இந்தியா’ என கூறியிருப்பது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

குற்றச்சாட்டு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திரையுலகினரையும், ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என சுஷாந்த்தின் தந்தை மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர். மேலும் சிபிஐ விசாரணை கோரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுஷாந்த் வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சோதனை, கைது

இது ஒருபுறம் இருக்க, சுஷாந்த் சிங்கிற்கு ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அதுதொடர்பாக என்சிபி எனப்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. ரியா சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார், ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் 9ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஷோயிக் மற்றும் மிராண்டா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

‘வாழ்த்துக்கள் இந்தியா’

இந்நிலையில், மகன் ஷோயிக் சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்ட பின், இந்த வழக்கு தொடர்பாக அவரது தந்தையும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான இந்திரஜித் சக்ரபோர்த்தி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்; “வாழ்த்துக்கள் இந்தியா. நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள். இந்த வரிசையில் அடுத்து என் மகள் இருக்கிறார் என நம்புகிறேன். அதன்பின்னர் யார் என தெரியவில்லை. நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட சிதைத்துவிட்டீர்கள். ஆனால் நிச்சயமாக, எல்லாம் நீதிக்காக நடந்தால் நியாயமானது. ஜெய் ஹிந்த்” என்று கூறி உள்ளார். இந்திரஜித் சக்ரபோர்த்தி ‘வாழ்த்துக்கள் இந்தியா’ என கூறியது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here