டோலிவுட் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.
“வக்கீல் சாப்”
1971 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி பிறந்த பவன் கல்யாண், இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாள் பரிசாக அவர் நடிக்கும் “வக்கீல் சாப்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான ‘பிங்க்’ திரைப்படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. “நேர்கொண்ட பார்வை” என்ற பெயரில் அஜித் நடிப்பில் தமிழிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். ‘வக்கீல் சாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் உயிரிழப்பு
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலிருக்கும் சாந்திபுரம் பகுதியில் உள்ள பவன் கல்யாண் வீட்டின் முன்பு, ரசிகர்கள் மிகப்பெரிய பிளெக்ஸ் வைக்க திட்டமிட்டனர். அதன்படி 25 அடி உயர பிளெக்ஸ் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த மின் கம்பிகள் மீது உரசி மின்சாரம் தாக்கியதில் சேகர், அருணாச்சலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற மூன்று பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி முடிந்துவிட்டதே என திரையுலகினர் பேசி வருகின்றனர். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பவன் கல்யாண் நடித்து வரும் ‘வக்கீல் சாப்’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.