தியேட்டர்கள் திறக்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நீட்டித்து வருவதால் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தியேட்டர்கள் மூடல்
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதனால் ரிலீஸூக்கு தயாராக உள்ள பல திரைப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கு மாற்று வழியாக தயாரிப்பாளர்கள் பலர் OTT பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். ஏற்கனவே ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ போன்ற படங்கள் OTTயில் வெளியான நிலையில், தற்போது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் OTTயில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாஸ் நடிகரின் படமே OTTயில் வெளியாக உள்ளதால், மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது படத்தை OTTயில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர். தயாரிப்பாளர்களும் இதற்கு பெருமளவில் ஆதரவு தெரிவிப்பதால், ஏராளமான படங்கள் OTT ரிலீஸூக்கு வரிசை கட்டி நிற்கின்றன. 
OTTயில் ரிலீஸா?
அந்த வகையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் OTTயில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தியேட்டர்கள் திறக்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நீட்டித்து வருவதால் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை OTTயில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் தரப்பும், ஆர்.ஜே. பாலாஜி தரப்பும் ஒரு பெரிய OTT நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.















































