‘வரனே ஆவஷ்யமுன்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடித்தால் தான் நல்லா இருக்கும் என்று பிரபல நடிகை சோபனா விருப்பம் தெரிவித்துள்ளார்.
‘வரனே ஆவஷ்யமுன்ட்’
மலையாளத்தில் இந்த ஆண்டு வெளிவந்த படங்கள் அனைத்தும் நல்ல பெயரை பெற்றது. அந்த வரிசையில் ‘வரனே ஆவஷ்யமுன்ட்’ என்ற திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் போன்ற பலர் நடித்துள்ளனர். அனுப் சத்யன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மூலம் துல்கர் சல்மான் முதன்முதலில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். இப்படம் வெளிவருவதற்கு முன், பல சர்ச்சைகளை ஏற்படுத்தி பலமுறை துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
4 பேரை சுற்றியே கதை
விவாகரத்து பெற்ற ஷோபனா தன் மகள் கல்யாணி பிரியதர்ஷனுடன் வசித்து வருகிறார். சோபனா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அடுத்த வீட்டில் சுரேஷ் கோபி ரிட்டயர்டு மேயராக ஒரே ஒரு செல்ல நாயுடன் வாழ்ந்து வருகிறார். துல்கர் சல்மான் சீரியல் ஆக்டர்ஸான தனது ஆன்ட்டியுடன் பள்ளி செல்லும் சிறுவயது தம்பியுடன் வசித்து வருகிறார். இந்த நான்கு பேர்களை சுற்றிச் சுற்றி கதைகள் பின்னப்பட்டு இருந்தாலும், கதையை சுவாரஸியமாக கொண்டு சென்றது சாமர்த்தியமான ஒன்று தான். அறிமுக இயக்குனராக இருந்தாலும் படத்தை அற்புதமாகவே இயக்கியுள்ளார். முற்றிலும் சென்னையை சுற்றியே எடுக்கப்பட்ட படமாக இருப்பதால், பெரும்பாலான வசனங்களும் தமிழிலேயே இடம்பெற்றிருக்கின்றன. அதனாலேயே சென்னை ரசிகர்களையும் இப்படம் பெருமளவில் கவர்ந்துள்ளது. இரண்டு வெவ்வேறு வயதிலுள்ள ஜோடிகள் இடையே ஏற்படும் உறவு முறையை இப்படத்தில் மையமாக கூறியிருப்பார்கள்.
ஷோபனா விருப்பம்
சமீபத்தில் நடிகை சோபனாவிடம் சுரேஷ்கோபி கதாபாத்திரத்தில் தமிழில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் யார் நடித்தால் இந்த படம் நன்றாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல் ரஜினி தான் என்று பதில் கூறியுள்ளார். இதைக்கேட்ட ரஜினி ரசிகர்களும் இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுமா என்று எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஷோபனா இவ்வாறு கூறியிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ‘வரனே ஆவஷ்யமுன்ட்’ படத்தின் மூலன் அவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடி இருக்கின்றது.