வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோமாவில் அதிபர்?
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்தும், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்ட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார். இதனிடையே, ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க்கிற்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள்ள அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
சகோதரிக்கு அதிகாரம்!
இந்நிலையில், கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான தகவலை தென்கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் டே ஜங்கின் உதவியாளராக இருந்த சாங் சங் மின் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கிம் ஜாங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜாங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சாங் சங் மின் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் வெற்றிடம் தென்பட கூடாது என்பதாலேயே, அவரது சகோதரி கிம் யோ ஜாங் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.