நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவுகிறது.
டைம் பாஸ்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் சினிமா ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக நடிகர், நடிகைகள் வீட்டில் இருப்பவர்களுடன் பொழுதை கழித்து வருகின்றனர். எப்பொழுதும் சூட்டிங் என்று பல நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சுற்றி பிஸியாகவே இருந்து வந்த நடிகர், நடிகைகளுக்கு இது ஒரு விடுமுறை காலமாகவே இருந்து வருகிறது. இந்த நாட்களில் நடிகர், நடிகைகள் தங்களது அழகையும், உடலையும் பேணிக்காத்து வருவதோடு, உடற்பயிற்சி செய்வது, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வது, செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது என தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதனை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் வெளியிட்டு ரசிகர்களிடம் உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
டி-சர்ட்டுக்காக சண்டை
அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ், ஊரடங்கு காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். தனுஷ், அவர்களுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு கேப்ஷனாக “எனது மூத்த மகன் எனது டீ-சர்ட்டை அணிந்துகொண்டு தன்னுடையது என்று விவாதிக்கும் தருணம்” என்று கூறியுள்ளார். மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டாலே அப்பாவின் உடைகளை அணிந்து கொண்டு விவாதத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்த அழகிய தருணம் தற்போது தனுஷின் குடும்பத்திலும் நடந்து வருகிறது. இந்தப் புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்களும், லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் எங்கள் வீட்டிலும் இதே பிரச்சனைதான் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகை, உங்களைப் பார்த்தால் இவ்வளவு பெரிய மகன்களுக்கு அப்பா மாதிரியே தெரியவில்லை இன்னும் இளமையாகவே இருக்கீங்க தலைவரே என்று கூறியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. நடிகைகள் பலரும் இந்தப் புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் போட்டுள்ளனர். நடிகை அதிதி ராவ் பதிவிட்டுள்ள கமெண்டில் “அவர்கள் உங்களை இனிமையாக துன்புறுத்துகிறார்கள் என்று நம்புகிறேன்” எனப் பதிவு செய்துள்ளார்.