இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வரவேற்ற சினிமா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த ஷங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். தன் குழுவுடன் சேர்ந்து மேடை நாடக நிகழ்ச்சிகளை எப்பொழுதும் நடத்துவார். அந்த நிகழ்ச்சிகள் மூலம் எஸ்.ஏ. சந்திரசேகர் கண்ணில் பட, அவர் மூலமாக எழுத்தாளராக சினிமாவிற்குள் நுழைந்தார் ஷங்கர். அவரது முதல் படைப்பு 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் துவங்கி, இன்று வரை தனது பிரம்மாண்ட படங்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார். முதல் படத்திலேயே பிலிம்பேர் விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வாங்கி குவித்தார். முற்றிலும் மாறுபட்டு, ஒவ்வொரு படைப்பையும், பிரம்மாண்டத்தின் உச்சமாக கொடுத்து வந்த ஷங்கர், புதுப்புது தொழில் நுட்பத்தையும், சினிமாவில் இருக்கும் பல நுணுக்கங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். ‘ஜென்டில்மேன்’ இவரது முதல் படமா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு அவரது படைப்பு எதார்த்தத்தின் உச்சம்.
காதல் படங்கள்
காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என்று அவரது படைப்புகள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டு தான். இதுவரை 14 படங்களுக்கு மேல் இயக்குநராகவும், 9 படங்களுக்கு மேல் தயாரிப்பாளராகவும், 13 படங்களுக்கு மேல் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார் ஷங்கர். இவர் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சமூக அக்கறையோடு இருக்கும். இவரது படைப்புகளில் உருவான அனைத்து படங்களுமே ஒன்றோடு ஒன்று எது சிறந்தது என்று போட்டி போட்டுக்கொண்டு நிற்கும். பிரம்மாண்டத்தின் உச்சம் என்றால் அதை ஜீன்ஸ் படத்தில் வரும் ஏழு அதிசயங்களை சொல்லலாம். இதுவரை எந்த இயக்குநர்களும் செய்யாத ஒரு புது முயற்சியை செய்தார் ஷங்கர். ஒரே பாடலுக்கு அனைத்து உலக அதிசயங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினர். அவரது படங்களில் வரும் ஒவ்வொரு வசனமும், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், தன்னம்பிக்கை தரும் வகையிலும் இருப்பது இவரது பெரிய பலம்.
காத்திருக்கும் வெற்றி
இந்தியன் 2 படத்தின் வெற்றிக்காக தற்போது காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். எப்பொழுதும் அமைதியாகவும், யதார்த்தமாகவே இருக்கும் ஷங்கர், பிரம்மாண்டத்தை உச்சத்தில் காட்டுவதில் இவரை மிஞ்ச யாருமே இல்லை. இவருக்கு நிகர் இவர் மட்டுமே. எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் இவரின் பிரம்மாண்டத்தையும், தொழில்நுட்பத்தையும் அசைக்கக்கூட முடியாத அளவிற்கு, ஷங்கரின் வெற்றிப் படிக்கட்டுகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என்று அரசியல் சாயம் உள்ள படமாக இருந்தாலும் சரி, ஜீன்ஸ், காதலன், பாய்ஸ், நண்பன் போன்ற இளைஞர்களுக்கு ஏற்ற காதல், ரொமான்ஸ், நட்பு போன்றவைகளும் சரி, இவரது படைப்புகள் அனைத்தும் அற்புதம் தான். இத்தனை பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் அவரது ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் ஷங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.