‘காதல்’ திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சந்தியா தற்போது சின்னத்திரை சீரியலிலும் நடிக்கவிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 
மனம் கவர்ந்த நடிகை
தமிழ் சினிமாவில் ‘காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சந்தியா. அதனைத்தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், தூண்டில், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு எனப் பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிப் படங்களிலும் சந்தியா நடித்துள்ளார். அதன்பிறகு சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையாததால், சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சீரியலில் சந்தியா
இந்நிலையில், சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை சந்தியா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ சீரியலில் கவுரவ தோற்றத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இதுகுறித்த புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள்தோறும் இரவு 8:30 மணிக்கு ‘கண்மனி’ தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எஸ்.என். சக்திவேல் இயக்கி வரும் இந்த மெகாத்தொடரில், பூர்ணிமா, சஞ்சீவ், லீஷா மற்றும் சாம்பவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நடிகை சந்தியாவும் களமிறங்கியுள்ளது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.















































