அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் முடிவு
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமியின் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேன்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கே.பி. முனுசாமி கூறினார்.
வெற்றி பெறுவதே இலக்கு
இதனிடையே, 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அஇஅதிமுகவின் இலக்கு என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது; தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.