மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றி ஆம்புலன்ஸ் உதவியாளர் கூறியிருக்கும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மர்மங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக பிகார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியா வாக்குமூலம்

சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதை கண்டறிந்த போலீசார், அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறையும் ரியா மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக ரியா சக்ரபோர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரியாவும், அவரது சகோதரரும் சுஷாந்தின் பிசினஸ் பார்ட்னராக இருந்தது தெரியவந்தது. மேலும் பணப்பரிமாற்றம் குறித்து கேள்வி எழுப்பட்டு, ரியாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன. ரியா குடும்பத்தின் சொத்து விவரங்கள் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. 

திடீர் திருப்பம்

சுஷாந்த் மரண வழக்கில் ஒவ்வொரு சாட்சியும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில், சுஷாந்தின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உதவியாளர், சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இறந்து கிடந்த சுஷாந்தின் உடல் மஞ்சள் நிறத்தில் இருந்ததாகவும், அவரது உடலில் சில காயங்களும், அடையாளங்களும் இருந்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் சுஷாந்தின் கால்கள் வளைந்து இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல சந்தேகங்களையும், திருப்பங்களையும் கொண்டுள்ள சுஷாந்த் வழக்கு, தற்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் சொன்ன இந்த தகவல்களால் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனை முடிவு, மூச்சுத்திணறல் காரணமாகத் தான் சுஷாந்த் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சித் தகவல்

இதனிடையே, சுஷாந்த் சிங்கின் பாதம் திருகப்படிருந்ததாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சுஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை செய்வது பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் உதவியாளர் கூற்றுப்படி, சுஷாந்தின் கணுக்காலுக்கு கீழுள்ள பாதம் முறிந்ததை போன்று திருகப்பட்டிருந்தது என தெரிவதாகவும், உண்மைகள் வெளிவருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here