எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சர்ச்சை நாயகி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் கமல்ஹாசனை சாடிய மீரா, திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன், அவருக்கு நடிக்கவே தெரியாது எனக் கிண்டலடித்தார். நடிகர்கள் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக பேசி மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கினார். தொடர்ந்து நடிகர் விஜய்க்கு எதிராகவும் அவரது ரசிகர்களுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கடும் கண்டனம்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் சூர்யாவும், விஜய்யும் பற்றி மீரா மிதுன் பேசியதற்கு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜாவும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார். ஆனால், மீரா மிதுன் பாரதிராஜாவையும் விட்டுவைக்காமல் அவரையும் கேள்வி கேட்டு சரமாரியாக விமர்சித்தார். மேலும் விஜய்யின் மகனைப் பற்றி போட்ட டுவீட்டுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்

மீரா மிதுனின் விமர்சனங்களை பற்றி சூர்யாவும், விஜய்யும் வாய் திறக்காமல் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள். இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த சூர்யா ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. அஜீத் ரசிகர்களும் இதற்கு ஆதரவாக டுவீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here