கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தயாரிப்பாளர் வி. சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 67.
தீவிரமாகும் கொரோனா வைரஸ்
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாவதன் காரணத்தால் பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா என பச்சன் குடும்பமே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர். பிறகு இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நடிகர் விஷாலுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு பிறகு பூரண குணமடைந்தார்.
சுவாமிநாதன் மரணம்
தற்போது பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான வி. சுவாமிநாதன், கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோகுலத்தில் சீதை, உள்ளம் கொள்ளை போகுதே, புதுப்பேட்டை, அன்பே சிவம் போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் வி. சுவாமிநாதன். இவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சிறு சிறு காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘பகவதி’ படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து “இது உங்கள் சொத்து” என்று அரசு பேருந்தை விற்கும் ஒரு காமெடி காட்சியில் நடித்தார். இந்த காட்சி பெரும் அளவில் பேசப்பட்டது.
கும்கி அஸ்வினின் தந்தை
வி. சுவாமிநாதன் ‘கும்கி’ படத்தில் நடித்த அஸ்வினின் தந்தை ஆவார். சூளைமேட்டில் வசித்து வந்த சுவாமிநாதனுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பிறகு கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுவாமிநாதனின் மறைவுக்கு திரைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.