தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், திருமணம் உள்ளிட்ட அனைத்து தனி நபர் நிகழ்ச்சிகளுக்குக்கும் அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அளிக்கத் தயார் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னையில் பொது போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. என்ன காரணத்திற்காக பேருந்து தேவைப்படுகிறது, இ-பாஸ் அனுமதி உள்ளதா உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்த பின்னர் பேருந்துகள் வழங்கப்படும் என்றும், மலைப்பகுதிகளில் கிலோ மீட்டருக்கு 55 ரூபாயும், தரைப்பகுதிகளில் கிலோ மீட்டருக்கு 45 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கம்
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; போக்குவரத்துத் துறை அமைச்சர் அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிடுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு சென்று வர ஏதுவாக தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 30ம் தேதி அன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது 50 சதவிகிதப் பணிகளுடன் செயல்படும் அனைத்துத் தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு பேருந்து
பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களைக் குழுவாக அழைத்து வருவதற்கும் மற்றும் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 94450 14402, 94450 14416 மற்றும் 94450 14463 என்ற கைப்பேசி எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.