1978 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து அப்படத்தின் இயக்குநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் வதந்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பற்றிய பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பல கட்டுக்கதைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் ஒரு வதந்தி கிளம்பியது. பிறகு ரஜினி, நயன்தாரா ஜோடிக்கு கீர்த்தி சுரேஷ் மகளாக நடிக்கப் போகிறார் என்று பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டரைப் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழுவினரிடம் இருந்து வெளிவரவில்லை. அதனைதொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், ‘அறம்’ இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா தான் நடிப்பார் என அப்படத்தின் இயக்குநர் திட்டவட்டாமாக கூறினார். அதனால் இதுவும் பொய்த்துப் போனது.
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கீர்த்தி சுரேஷ்?
தற்போது ‘சிகப்பு ரோஜக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. பாரதிராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில், ஆண்களை மயக்கி தன் ஆசையில் சிக்கவைக்கும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்யும் சைக்கோவின் கதை இடம்பெற்றிருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் பெண்களை மயக்கி ஏமாற்றம் ஆண்களை தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் பெண்ணைப் பற்றிய கதை என்றும், அந்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இது உண்மையா? இல்லையா? என்று தெரிவதற்கு முன்பே, கீர்த்தி சுரேஷ் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று பலர் கமெண்டுகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கூறியிருப்பதாவது; “இதுவரையில் சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றி எந்த ஒரு ஆலோசனையும் நாங்கள் செய்யவில்லை. எந்த ஒரு நடிகையிடமும் அதைப்பற்றி நானும், எனது தந்தையும் பேசவில்லை. அப்படி ஏதாவது இருந்தால், நான் அல்லது என் தந்தையோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். தகுந்த நேரத்தில் சிகப்பு ரோஜாக்கள் படம் பற்றி யோசிப்போம். இவ்வாறு மனோஜ் தெரிவித்துள்ளார்.