சுதந்திர தினத்தையொட்டி 43 தேசபக்தி திரைப்படங்கள் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
தேசபக்தி படங்கள்
ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் தினம் என்றால் அது சுதந்திர தினம் தான். அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி 74வது சுதந்திர தினத்தை கொண்டாட இந்தியா முழுவதும் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சுதந்திர போராட்டம் பற்றியும், சுதந்திர வீரர்கள் பற்றியும் காலம் காலமாக எடுக்கப்படும் திரைப்படங்கள், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. சுதந்திர போராட்ட படங்களை பிரம்மாண்டமாக எடுத்து சுதந்திர தாகத்தை பல சினிமாக்கள் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், கட்டபொம்மன் முதல் இந்தியன் வரை பல படங்களை நாம் கூறலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, பாரத விலாஸ் போன்ற படங்கள் அந்த காலத்திற்கு ஏற்றவாறும், இந்தியன், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம், ஜெய்ஹிந்த், ரோஜா போன்ற படங்கள் இக்காலத்திற்கு ஏற்ற மாதிரியும் உருவாக்கப்பட்டு, தனித்துவம் பெற்றுள்ளன.
புதிய முயற்சி
இதுபோன்ற தேசபக்தி படங்களை மேம்படுத்தும் விதமாகவும், அதனை கொண்டாடும் விதமாகவும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த விழா, இன்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும், வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையிலும், அவர்களின் தேச பக்தியை விளக்கும் வகையிலும் இவ்விழாவை நடத்த உள்ளனர். www.cinemasofindia.com என்ற இணையதளத்தில் பல இந்திய மொழிகளில் உருவான தேசபக்தி படங்கள் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 43 திரைப்படங்கள் இணையதளத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.