தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல்,விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அலவாஞ்சியில் 58 செ.மீ. மழையும், கூடலூர் பஜார் பகுதியில் 33 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேல் பவானியில் 32 செ.மீ. மழையும், மேல் கூடலூரில் 31 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. நடுவட்டம் 23 செ.மீ., தோவாலாவில் 22 செ.மீ., நீலகிரி மாவட்டம் க்ளென்மோர்கனில் 21 செ.மீ., பந்தலூர், ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் தலா 18 செ.மீ., எமரால்டு 17 செ.மீ., சின்னக்கல்லார், சோலையாறில் தலா 11 செ.மீ., சின்கோனாவில் 10 செ.மீ., வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், கொங்கண் கோவா, மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு கடல் பகுதிகளில் மணி 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், தென் மேற்கு, மத்திய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here