தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் இருந்து வந்தது. தற்போது பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதுடன், ஆன்லைன் மற்றும் டிவி சேனல்கள் மூலமாக பாடம் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தையொட்டி பாதிப்பு கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும் சென்னையில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை நடைபெற்று வந்தது. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்புமாறு மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியது.
பள்ளிகள் திறப்பு?
இதனையடுத்து தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இருக்காது என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.