பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாத்தியத் திறன்
பல பின்னணி பாடகர்கள் இருந்தாலும், தனது அசாத்திய திறமையால் இன்றும் முன்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என்று 16க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். கமல், ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் எஸ்.பி.பி. பாடியுள்ளார். நடிகர்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றி பாடுவதில் இவர் வல்லவர். மூச்சுவிடாமல் பாடுவதில் இவரை அடித்துக்கொள்ள எந்த பாடகர்களாலும் முடியவில்லை. 6 முறை பின்னணி பாடகருக்கான தேசிய விருதும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளையும் எஸ்.பி.பி. பெற்றுள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். லேசான அளவிலேயே கொரோனா தொற்று இருப்பதால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனை விரும்பாத எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தான் நலமாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பி விடுவேன் என்றும் எஸ்.பி.பி. கூறியுள்ளார்.
கருணாஸுக்கும் கொரோனா
எஸ்.பி.பி.யைத் தொடர்ந்து நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கருணாஸ் வீட்டு காவலாளிக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்ததால், கருணாஸுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து திண்டுக்கலில் இருக்கும் தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
பிரபலங்களும் பாதிப்பு
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா போன்ற அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா, அமிதாப் பச்சன் ஆகிய மூவர் மட்டும் வீடு திரும்பினார். ஆனால் அபிஷேக் பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சமீபத்தில் தொற்று கண்டறியப்பட்டு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.