லெபனானின் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்த விபத்தில் 73 பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோர விபத்து
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருந்த 2,750 டன்கள் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. விபத்து நடந்த சில விநாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. பெய்ரூட் நகரம் மட்டுமல்லாமல் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடி விபத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 73 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் இரங்கல்
இந்த பயங்கர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது; பெய்ரூட் நகரத்தில் நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தால் அதிகளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.