பிரபல முன்னணி நடிகைகள் பலர் நகைக்கடை விளம்பரங்களில் நடிப்பதால் தான் நகைகளின் விலை உயர்ந்துவிட்டதோ என மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.

அனைவரையும் கவரும் நகைகள்

நகைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் சமீப காலமாக தங்க நகைகளின் விலை உயர்ந்துகொண்டே போவதால் இப்போதே அதனை வாங்கினல் தான் உண்டு, இல்லாவிட்டால் நகைகளை என்றுமே வாங்க முடியாது என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. சராசரியான குடும்பத்துப் பெண்களுக்கு நகைகளின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. ஆனால், அதைவிட சினிமா பிரபலங்களும் நகைகளின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் அனைத்து நடிகைகளும் நிறைய நகைக்கடை விளம்பரங்களில் நடித்துப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அழகி முதல் அனைத்து நடிகைகளும் இந்த கணக்கில் அடங்குவர். தமன்னா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா, சினேகா, காஜல் அகர்வால், நயன்தாரா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. பாலிவுட்டிலும் மறைந்த ஸ்ரீதேவி, தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா உள்ளிட்டோர் நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். கல்யாணக் கோலத்தில் மணப்பெண் போல கழுத்து நிறைய நகைகளுடன் நெற்றிச்சுட்டி, குங்குமப்பொட்டு என அனைவரும் வியக்கும் வண்ணம் கலக்கிக் கொண்டு இருக்கின்றனர் நடிகைகள்.

நகை விளம்பரத்தில் நடிகர்கள்

நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்களும் இதில் சேர்ந்து கொண்டுள்ளனர். முன்னணி நடிகையாக இருக்கும் தங்களது மனைவிகளின் பக்கத்தில் நின்றுகொண்டு நடிகர்களும் அந்த விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பதை பார்க்க முடிகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சில முன்னணி நடிகைகள் தங்களின் திருமணத்திற்கு தங்க ஜரிகையிலேயே நெய்த புடவை செய்வதிலும் ஆர்வத்தை காட்டி வருகின்றனர். அந்தக் காலத்தில் தங்க நகைகள் என்றாலே காசு மாலையும், மாங்காய் மாலையும் மட்டும் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது டிரெண்டிங் ஆக பலப்பல டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த டிசைன்களையும், வடிவமைப்புகளையும் பார்த்தால் இது உண்மையிலேயே தங்க நகை தானா? என்று கேட்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கின்றது. ஆன்டிக் ஜுவல்லரி, பிரைடல் ஜூவல்லரி என தனித்தனி ரகமாக பிரித்து, ஒவ்வொரு சடங்கு சம்பர்தாயங்களுக்கு ஏற்றவாறு அவற்றை விற்பனை செய்து வருகின்றனர் நகை கடை வியாபாரிகள். இப்படி வியாபாரத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் நடிகைகள் நகைக்கடை விளம்பரங்களில் நடிப்பதால், அதன் விலை கூடிக்கொண்டே போகிறதோ என மக்கள் மனதில் கேள்வியாகவே இருக்கிறது. தற்போது தங்க நகைகளின் விலையை கேட்டால் நடுத்தர மக்களுக்கு நகைகள் என்பது ஒரு எட்டாக் கனியாகவே இருந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here