பிரபல குணசித்திர நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.
சின்னி ஜெயந்த் மகன்
இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியன. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழக அளவில் கணேஷ்குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். மொத்தம் 829 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய், சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் ஸ்ருதன் ஜெய் மற்ற சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, யு.பி.எஸ்.சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார். சிறப்பான விஷயம் என்னவென்றால் இது அவரது முதலாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் என்ற தன் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார்.
மகளிர் மேம்பாட்டில் அதிக கவனம்
தேர்ச்சி பெற்றது குறித்து ஸ்ருதன் ஜெய் கூறுகையில்; நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஐ.ஏ.எஸ் கனவு என்பது சின்ன வயசுல இருந்தே என்னுடைய விருப்பமாக இருந்தது. அப்பா, அம்மா ரெண்டு பேரும் என்னை மிகவும் ஊக்குவித்தனர். அப்பா சினிமாவுல இருந்தாலும் எப்பவுமே என்னை சினிமாவுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தினதில்ல. ஆனா, நானும், என் தம்பியும் நல்லா டான்ஸ் ஆடுவோம், பல நாடகத்துல நடிச்சிருக்கோம். இருந்தாலும் சினிமா மேல ஆசை வரல. அரசு அதிகாரியாக வரணும் அப்படிங்கறது என்னோட நீண்ட நாள் ஆசை. அதுக்காக நிறைய படிச்சேன், அதிகநேரம் ஒதுக்கினேன், இதுக்கு அப்பாவும் அம்மாவும் ரொம்ப துணையாக இருந்தாங்க. அந்த ஒரு சப்போர்ட்தான் இந்த வெற்றியை எனக்கு கொடுத்துருக்கு. 75வது ரேங்க் வாங்கினதால நிச்சயமா தமிழ்நாட்டில் தான் எனக்கு போஸ்டிங் கிடைக்கும். கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கம். இவ்வாறு ஸ்ருதன் கூறினார்.