டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தடை
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும், தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
அமெரிக்காவிலும் தடை?
தற்போது அந்த வரிசையில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இத்துடன் ஹாங்காங் மீதான சீனாவின் ஆதிக்கம், அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப்போர் என்று அனைத்தும் அமெரிக்காவை யோசிக்க வைத்துள்ளது. இதனால் மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கிய டிக்டாக்கின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனம், டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பது குறித்து பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனாலும் டிக் டாக்கிற்கு தடை விதிப்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்ததால் அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ளா, அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசிய பின் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், அதுகுறித்த பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.