தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மற்ற தொழில்களைப் போலவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையும் மிகவும் பாதிக்கப்பட்டது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் திரைத்துறையைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்தனர். இதனிடையே சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து நிறுத்தப்பட்ட சீரியல்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. புதிதாக பதிவு செய்யப்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக நடிகர், நடிகைகள் பலர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயக்கம் காட்டி வருவதாலும், சிலரால் வெளியூர்களில் இருந்து வர முடியாத காரணத்தாலும், சீரியல் கதாபாத்திரங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அனுமதி வழங்க இயலாது

இதனிடையே, தற்போதுள்ள சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது என்றும் சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளதாகவும் கூறினார். எனவே தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here