சீமான் விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி சூளுரைத்துள்ளார்.

வெளியாகும் வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக 10 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் நடிகை விஜயலட்சுமி. அந்த காலகட்டத்தில் சீமான் தன்னுடன் தனிமையில் இருந்ததாக கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அவர், அதன்பின் சீமானைப் பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சீமானுக்கு எதிராக, வீடியோ ஒன்றை வெளியிட்டார் விஜயலட்சுமி. அந்த வீடியோ வைரல் ஆனதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமியை சரமாரியாக திட்டி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சீமானை கண்டித்து நிறைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் விஜயலட்சுமி வெளியிட்டு வருகிறார். ஆனால் இதனை பொருட்படுத்தாத சீமான், அவருடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சாலையில் அமர்ந்து போராட்டம்

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். சீமான் தன்னோடு சமாதானம் பேசினால் எல்லாப் பிரச்சனைகளையும் முடித்துக் கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார். இதனிடையே, தன்னுடைய புகாரின் பேரில் சீமான், ஹரி நாடார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி நேற்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டின் சாலையில் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் விஜயலட்சுமி. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் சமாதானம் பேசியபின், போராட்டம் கைவிடப்பட்டது.

விட மாட்டேன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, சீமானோ, ஹரி நாடாரோ இதுவரை சமாதானம் பேச வரவில்லை என்றார். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். தன்னை அவமானப்படுத்துவதே அவர்களின் நோக்கம் எனத் தெரிவித்த விஜயலட்சுமி, தனக்கு நீதி கிடைக்கும் வரை விடமாட்டேன் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here