அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடை

லடாக் எல்லைப் பகுதியில் கடந்த  ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும், தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

டிக் டாக்கிற்கு சிக்கல்?

இந்த நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கு மாற்று திட்டம் வைத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். டிக்டாக் செயலிக்கு பதில் வேறு செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி யோசித்து வருவதாக அவர் கூறினார். ஏற்கனவே, கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கும் சூழலில், அந்நாட்டு செயலியான டிக் டாக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருப்பது சீனாவை மேலும் ஆத்திரமடையைச் செய்துள்ளது. இதனிடையே,  டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here