பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் தனி மனித இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பக்ரீத் பண்டிகை
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த மற்றும் இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்த, ஒரு சிறந்த தியாகமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூறும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு தொழுகை
இன்று பக்ரீத் பெருநாளையொட்டி டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பொதுஇடங்களில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வீடுகளிலேயே தனிமனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாகர்கோவில், இடலாக்குடி, இளங்கடை, வடசேரி, கன்னியாகுமரி, தக்கலை உட்பட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டு மொட்டை மாடி மற்றும் வீட்டு வளாகங்களில் அதிகாலையிலேயே சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகையில் நடத்தினர். குர்பானி கொடுத்து நண்பர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.