இந்து மதம் குறித்தும் கந்தசஷ்டி கவசம் பற்றியும் அவதூறாக பேசிதாக கூறப்படும் விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சை கருத்து

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி பாடல் குறித்தும், இந்துக்கடவுள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ பதிவிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கந்தசஷ்டி குறித்த விமர்சனத்துக்காக ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன், செந்தில்வாசன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுடன், யூடியூப் சேனலில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களும் அதிரடியாக நீக்கப்பட்டன.

வேலு பிரபாகரன் கைது

இதனிடையே, இயக்குநர் வேலு பிரபாகரன் கறுப்பர் கூட்டத்திறகு ஆதரவாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை ஆதரித்தும், கந்தசஷ்டி கவசம், இந்து மதம் போன்றவற்றிற்கு எதிராகவும் சர்ச்சையான கருத்துக்களை பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து வேலு பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், வேலு பிரபாகரனை மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மத விரோதத்தை தூண்டுதல், மிரட்டல் விடுத்தல், அவமதிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை மனிதர்

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்னாளில் இயக்குநர் ஆனவர் வேலு பிரபாகரன். இவர் நாளைய மனிதன், அதிசய மனிதன், புதிய ஆட்சி, ராஜாளி, காதல் கதை உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தனது 60 ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் சிறியவரான ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டார் வேலு பிரபாகரன். இந்த வயதில் இவருக்கு ஏன் திருமணம் என பலரும் விமர்சித்தனர். அவர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல என பலர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here