ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஆதரித்து விளம்பரத்தில் நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைனில் பல சூதாட்டங்கள் இருந்தாலும், ‘ரம்மி’ என்ற சீட்டாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு உண்டு. அதனை விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும். இதனால் இளைஞர்கள் எந்த நேரமும் ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடப்பதாகவும், பணம் விரயமாவதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன் போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும், வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என தூண்டப்படுவதால், இளைஞர்கள் அந்த விளையாட்டுகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும் பணத்தைத் தொலைத்து நிதி நெருக்கடிக்கும் ஆளாவதால், உயிர்ப் பலிகளும் ஏற்படுகின்றன.
நீதிமன்றத்தில் வழக்கு
இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தின் விளம்பரத்தில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க தொடங்கியுள்ளது. இதனிடையே, வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் என்பவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அந்த விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய உத்தரவிட வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்டு 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.