பிரபல மலையாள நடிகர் அனில் முரளி உடல்நலக்குறைவல் காலமானார். அவருக்கு வயது 56. 
மிகச்சிறந்த நடிகர்
மலையாளத் திரையுலகில் குணச்சித்திர நடிகராக தனக்கென ஒரு இடம் பிடித்தவர் அனில் முரளி. முதன்முதலில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த இவர், 1993 ஆம் ஆண்டு வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குணச்சித்திர நடிகராக மட்டுமல்லாமல், வில்லனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில், கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், கணிதன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 போன்ற படங்களில் அனில் முரளி நடித்துள்ளார். கிட்டதட்ட 20 வருடங்கள் மலையாளப் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், அதன்பிறகே தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். தமிழில் கடைசியாக சிபிராஜ் நடிப்பில் வெளியான வால்டர் திரைப்படத்தில் அனில் முரளி நடித்திருந்தார். 
திரையுலகினர் இரங்கல்
அனில் முரளிக்குக் கல்லீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 56 வயதாகும் அனில் முரளிக்கு சூமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் இருக்கின்றனர். அனில் முரளியின் திடீர் மறைவுக்கு மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினரும் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.















































