தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் உள்ளது.

எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாததால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படுவது சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ளதால் பள்ளிக் கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

அமைச்சர் விளக்கம்

ஆனால், இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்றும் தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்த அவர், மீறி விளம்பரப்படுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here