கொரோனா காலத்தில் உரிய அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக நடிகை வனிதா மீது போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சை திருமணம்
திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன நாள் முதல் நடிகை வனிதா பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். திரையுலகினர் முதல் பொதுமக்கள் வரை வனிதாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கிவிட்டனர். தனக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வனிதாவின் திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவரும், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் விமர்சித்தனர். இதையடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மூக்கை நுழைத்த பிரபலங்கள்
இந்த விவகாரத்தில் தானாக மூக்கை நுழைத்த சில பிரபலங்களை நடிகை வனிதா சரமாரியாக விமர்சித்து வந்தார். விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் சமூக வலைத்தளங்களைப் பார்த்துதான் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாதது தனக்கு தெரியும் எனவும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார். மேலும் படித்தவர்கள் யாராவது இப்படி செய்வார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை கடுமையாகப் பேசி கண்டித்தார். யூடியூப் சேனலின் நேரலையில் பங்கேற்ற லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டது. முதலில் சாந்தமாக பேசிய இருவரும், பிறகு எல்லை மீறி பேசினர். தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர்.
வனிதா மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில், நடிகை வனிதா மீது போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுச் செயலாளர் நிஷா தோட்டா போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், வனிதா தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளச் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் நடிகை வனிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி அவதூறாக பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளதுடன், வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.