நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வேலையில் அவரது புதிய படத்தின் அப்டேட்ஸ் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனுஷின் அறிமுகம்

அண்ணன், அப்பா இருவரும் இயக்குநர்கள் என்று சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’ படம் முலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார். முதல் திரைப்படம் அப்பா இயக்கத்திலும், இரண்டாவது படம் அண்ணன் இயக்கத்திலும் நடித்தார். ஆரம்ப காலகட்டத்தில் தான் படாத கஷ்டங்கள் இல்லை, அவமானங்கள் இல்லை என தனுஷே பல மேடைகளிலும், பேட்டிகளிலும் கூறியுள்ளார். ‘திருடா திருடி’, ‘சுள்ளான்’, ‘தேவதையை கண்டேன்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என நடித்து வந்த தனுஷை, நடனம் ஆட தெரியாதவர், ஆங்கிலம் சரியாக வராது, ஒல்லியாக இருக்கிறார், ஹீரோவே கிடையாது எனப் பலர் குற்றம் சொல்லி வந்தனர். அதன்பிறகு தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட தனுஷ், தற்போது தமிழ் சினிமாவை உலக சினிமா அளவிற்கு கொண்டு போய் சேர்த்துள்ளார்.

திரை வாழ்க்கையில் முக்கியப் பங்கு

நடிகர் தனுஷின் திரை வாழ்க்கையில் அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்கு முக்கிய பங்கு உண்டு. தனுஷ் அவரது அண்ணனின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்றும் காலத்தால் அழிக்க முடியாத படங்களாக இருக்கின்றன. வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்தால் அது நிச்சயமாக ஹிட் என்று சொல்லும் அளவிற்கு இந்தக் கூட்டணி ஹிட் படங்களை வழங்கியுள்ளது. தனுஷக்கு முதல் முறையாக தேசிய விருதை பெற்றுத் தந்தது வெற்றிமாறன் படம் தான். இவர் இயக்கத்தில் உருவான “ஆடுகளம்” திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்று தமிழ் சினிமாவின் பார்வையை மாற்றியது. வட சென்னை, அசுரன் என தனது வித்தியாசமான நடிப்பால் சி சென்டர் ஆடியன்ஸ் வரை தன் பக்கம் இழுத்தார் தனுஷ். இதன்பின் பாலிவுட் சென்ற தனுஷ், அங்கும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

தேசிய விருதுக்கு தனுஷ் ரெடி

தனுஷ் தற்போது ஜந்து படங்களில் நடித்து வருகிறார். இன்று தனுஷின் பிறந்தநாளையொட்டி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் “ஜகமே தந்திரம்” படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகிப் பட்டையைக் கிளப்பி வருகிறது. அதுவும் அந்த “ரகிட ரகிட ரகிட” வரிகள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. மேலும் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின் “மேக்கிங் வீடியோ” இன்று வெளியாகிறது. இப்படம் கண்டிப்பாக தனுஷ்க்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்று பலரால் சொல்லப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் மீண்டும் ஒரு படம், கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என வரிசையாக ஹிட் கொடுக்க காத்துக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு, ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் எனப்பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here