தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு உடல்நலத்துடன் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதால், அக்கட்சியின் தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புரட்சி கலைஞர்

1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார் விஜயகாந்த். அதன்பிறகு 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 1981 ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், விஜயகாந்த்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், மாபெரும் வெற்றியையும் பெற்றது.

அரசியல் பயணம்

‘புரட்சிக் கலைஞர்’ எனவும் ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த், திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு 2006 ஆம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியிலும் வெற்றிப்பெற்றார். தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ்நாட்டு அரசியலில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்டார்.

உடல் நிலையில் முன்னேற்றம்

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரத்தில் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் அவர், அரசியல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். விஜயகாந்திற்கு அளிக்கப்பட்ட தொடர் மருத்துவ சிகிச்சைகளால், அவர் முன்பைவிட தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உற்சாகம் அடைந்துள்ள தேமுதிகவினர் மற்றும் ரசிகர்கள் ஆகஸ்ட் 25-ம் தேதி அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

மீண்டும் கம்பீரக்குரல்

விஜயகாந்த் முன்பைவிட தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்ற தகவல் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரின் கம்பீரமான பேச்சை விரைவில் கேட்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தேமுதிகவினர் கூறியுள்ளனர். மேலும், ஆண்டுதோறும் விஜயகாந்த் பிறந்த நாளை ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாடுவோம். இந்த ஆண்டும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான பணியை தொடங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கொரோனா தாக்கம் காரணமாக கட்சித் தலைமை அறிவிக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் எனவும் கூறியிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here