தஞ்சாவூர் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை வனிதா தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
வார்த்தைப் போர்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துகொண்டதாக பீட்டரின் முதல் மனைவி எலிசபத் ஹெலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் தனக்கு வேண்டும் என எலிசபெத் திட்டவட்டமாக கூறினார். இதனிடையே, எலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், தன் பெயரில் தனி யூடியூப் சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி என்பவர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். வனிதாவுக்கும் எலிசபத்துக்குமான பிரச்சனை, பின்னர் சூர்யா தேவிக்கும் வனிதாவுக்குமான பிரச்சனையாக மாறியது. இதன் உச்சகட்டமாக இருவரும் சரமாரியாக தாக்கிப் பேசினர்.
பிரச்சனை மேல் பிரச்சனை
பீட்டர் பால் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசியதால் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை கஸ்தூரியையும் கண்டபடி திட்டித் தீர்த்தார் நடிகை வனிதா. தன்னை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் ஆகியோர் மீது போலீசிலும் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவியை மட்டும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, நடிகை நயன்தாராவையும் வம்புக்கு இழுத்தார் வனிதா. திருமணம் ஆன பிரபுதேவாவுடன் நயன்தாரா லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். அதனை யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. நான் திருமணம் செய்ததை அனைவரும் எதிர்த்து கேள்வி கேட்கின்றனர் என்று ஆதங்கத்துடன் டுவிட்டரில் பதிவிட்டார் வனிதா. இதனைப் பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் செம கடுப்பாகி வனிதாவை வறுத்தெடுத்தனர். நயன்தாராவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எனக்கூறி ஒன்றுகூடி வனிதாவை டார்கெட் செய்தனர். இதனையடுத்து டுவிட்டரில் நெகட்டிவிட்டி அதிகமாக இருப்பதாக கூறி நடிகை வனிதா அதிலிருந்து வெளியேறினார்.
மன்னிப்பு கேட்ட வனிதா
இந்தச் சூழலில், ஊடகத்திற்கு பேட்டியளித்த வனிதா, தஞ்சாவூர் பக்கமெல்லாம் இரண்டு மனைவிகள் இருப்பது சாதாரண விஷயம் தான் என்றும் அங்கெல்லாம் எல்லா வீட்டிலும் இரண்டு மனைவிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். இதைப்பார்த்த தஞ்சாவூர் மக்கள் வனிதாவுக்கு எதிராக திரும்பினர். தங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தஞ்சாவூர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதற்காக வனிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இந்தப் பிரச்சனை பெருமளவில் சூடுபிடிக்க, மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்தார் வனிதா. வந்த உடனேயே முதல் பதிவாக தஞ்சாவூர் மக்கள் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது; என் அம்மாவும், அப்பாவும் தஞ்சையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். நான் தவறாக பேசி இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். என்னை தவறாக புரிந்துகொண்டு இருக்கலாம். ஆனால் நான் அவமதிக்கவில்லை. மரியாதை இல்லாமல் பேசி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய எதையும் நான் செய்திருந்தால் மிகவும் வருந்துகிறேன். என்றென்றும் தலை வணங்குகிறேன். என் தஞ்சை மண்ணை தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ள வனிதா, தஞ்சை பெரிய கோவிலின் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.