தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் பாடல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்திருக்கும் வேலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாடிய முருகன் பக்திப் பாடல் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

திரையில் ஜொலித்த ஜெயலலிதா

நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஜெயலலிதா பல வகையான நடனங்களை கற்று அதில் சிறந்து விளங்கினார். நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் முதன்முதலில் தனது பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். பின்னாளில் அவருடனே ஜோடி சேர்ந்து நடித்தார். குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலகில் அறிமுகமான அவர், படிப்படியாக தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்தார். பல மொழிகளிலான மேடை நாடகங்களில் தோன்றினார். ‘வென்னிற ஆடை’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜெயலலிதா, தமிழ் மக்களின் மனங்களில் இன்று வரை வாழ்ந்து வருகிறார். கலைக்காக பல சேவைகளை செய்துள்ள அவர், எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தால் வெற்றி என்றே அக்காலத்தில் இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து சிறந்த நடிகையாக திகழ்ந்து, பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஜெயலலிதா எனும் ஆளுமை

சினிமாவில் ஜொலித்ததை போலவே அரசியலிலும் பெரும் தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுக எனும் கட்சியை முழுமையாக வழி நடத்தியவர் இவர்தான். இன்று வரை அவரது புகழ் மேல் ஒங்கி நிற்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அதனை சமாளித்து இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் அவர். எம்.ஜி.ஆருடன் படங்களில் அதிகம் நடித்ததே இவர் அரசியலில் இடம்பிடிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. தலைசிறந்த அரசியல் ஆளுமை ஜெயலலிதாவிடம் இருந்தது என பலரும் கூறியுள்ளனர். மேலும் உலக நாடுகளில் உள்ள பல தலைவர்கள் ஜெயலலிதாவின் திறனைப் பார்த்து வியந்து போனதாக தெரிவித்துள்ளனர்.

பாடகி ஜெயலலிதா

ஜெயலலிதா சிறந்த நடிகை என்பதை தாண்டி மிகச்சிறந்த பாடகி என்பது பலருக்கும் தெரியும். அருமையாக பாடும் திறன்கொண்ட அவர், அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடியுள்ளார். இவை மட்டுமன்றி ‘ஒ மேரி தில்ருபா’, ‘சித்ர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்’, ‘இரு மாங்கனி போல் இதழ் ஒரம்’ போன்ற பாடல்களையும் தனது இனிமையான குரலில் பாடியுள்ளார். இவர் பாடிய சினிமா பாடல்கள் கூட அனைவருக்கும் தெரிந்து இருக்கும், ஆனால் பலரும் அறிந்திராத ஒன்று அவர் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்பதுதான். சினிமாவில் ஜெயலலிதா பிரபலமாக இருந்த காலகட்டத்தில், மறைந்த வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், பக்திப் பாடல்களை பாடியுள்ளார் .அதில் “தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலன்” என்ற முருகப்பெருமானை போற்றி ஒரு பாடலும், “மாறி வரும் உலகினிலே மாறாத மாரியம்மா” என்ற அம்மன் பாடலையும் பாடியுள்ளார் ஜெயலலிதா. உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ள நிலையில், இந்து மதத்தை சுற்றியும், முருகனை சுற்றியும் பல சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக எழுந்து வருகின்றன. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அன்று ஜெயலலிதா பாடிய “தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலன்” என்ற பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here