உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றை தடுக்க தவறினால் 2100ம் ஆண்டுக்குள் பனிக்கரடி இனமே அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தவிக்கும் பனிக்கரடிகள்

ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரியவகை விலங்குகளில் ஒன்று போலார் பனிக்கரடிகள். இந்தவகை கரடிகளுக்கு மீன்கள் மற்றும் கடல் சீல்கள் முக்கிய உணவாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 22,000 முதல் 31,000 வரை மட்டுமே பனிக்கரடிகள் உயிருடன் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் அங்கு வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளது. குறிப்பாக பனிக்கரடிகளின் நிலை கேள்விக்குறியாக மாறி வருகிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் பனிக்கரடிகள் தங்கள் வாழ்விடங்களையும், உணவுகளையும் இழந்து வருகின்றன. மேலும் அவை மனிதர்கள் வாழும் நிலப்பரப்பு நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் நிலை இப்படியே தொடர்ந்தால் ஆர்ட்டிக் பகுதியில் இருந்து உணவு, தங்குமிடத்திற்காக இடம்பெயர்தலை சந்தித்து வரும் போலார் பனிக்கரடி இனம், 2100ம் ஆண்டுக்குள் முழுவதும் அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை கனடாவின் தொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுத்தால் மட்டுமே இதுபோன்ற உயிரினங்களை காக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here