கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து சர்ச்சைக்குறிய வகையிலான கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் மீது துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். 
சர்ச்சை கருத்து
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி பாடல் குறித்தும், இந்துக்கடவுள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ பதிவிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கந்தசஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டுதோடு, சம்மந்தப்பட்ட வீடியோவையும் நீக்கியது. இருப்பினும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் யூடியூப் சேனலில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களும் அதிரடியாக நீக்கப்பட்டன.
ரஜினிகாந்த கடும் கண்டனம்
கந்தசஷ்டி பாடல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு திரையுலகினரும், ஆன்மீகவாதிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.















































