ஜூ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளதால் ஜூலை 27ம் தேதி முதல் புதிய நிகழ்ச்சிகளை காணலாம் என அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நோய்த் தொற்று பரவிக் கொண்டு தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படாததால், ஏராளமான தொழிலாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சில தினங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் ஜீ தமிழ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் இனி புதிய எபிசோட்களை எதிர்பார்க்கலாம். ஜூலை 27 முதல் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் பயணங்களை மீண்டும் தொடர்ந்து கண்டுகளிக்கலாம் என ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உருவாக்கும் முயற்சியாக, ஜீ தமிழ் ‘இதயத்தால் இணைவோம், இதையும் கடப்போம்’ எனும் ஸ்லோகனுடன் தன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்குகிறது.
பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
ஜீ தமிழ் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் அதேசமயம், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைத்து பணியாளர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. படப்பிடிப்புக்கு முன்னர் செட்களை சுத்தப்படுத்தவும், கிருமி நீக்கம் செய்யவும் பாதுகாப்பு நிபுணர்களின் குழு வரவழைக்கப்படுகிறது. அபாயங்களை குறைப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் நடைமுறை முடிந்ததும் முழுமையான ஆய்வு செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு ஒன்றும் வரவழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் நுழையும் முன்னரும், வெளியேறும் முன்னரும் நடிகர், நடிகைகள் மற்றும் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டாய தெர்மல் ஸ்கிரீனிங் (வெப்பப் பரிசோதனை) செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோப்புகள், சானிடைஸர்கள், கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் கொண்ட பாதுகாப்பு கருவிகள் செட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு கிடைக்கின்றன. கேமராவுக்கு முன்னால் இல்லாதபோது, நடிகர்கள் கட்டாயமாக மாஸ்க்குகளை அணிவார்கள். ஆபத்து காரணிகளை மேலும் குறைப்பதற்காக, குழுவினர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு இடையே தேவையற்ற தொடர்பைத் தவிர்ப்பதற்காக நடிகர்கள் தாங்களே சொந்தமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். ரெட்டை ரோஜா, என்றென்றும் புன்னகை, ராஜா மகள், நீதானே எந்தன் பொன்வசந்தம், கோகுலத்தில் சீதை, யாரடி நீ மோகினி, செம்பருத்தி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, சத்யா போன்ற தொடர்கள் ஜூலை 27ம் தேதி முதல் வாரத்தின் ஆறு நாட்களிலும் புதிய நேரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.