நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 11 செ.மீ. மழையும், மடத்துகுளத்தில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோபிசெட்டிபாளையம், குமாரபாளையம், சோலையாரில் தலா 7 செ.மீ. மழையும், தேவலா, ஓமலூர், டேனிஷ்பேட்டை பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், சூலூர், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், கொடுமுடி, தாராபுரம், பவானி, கொடைக்கானல் , திருச்செங்கோடு, வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேன்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.