கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாயின்றி தவித்த ஏழை – எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வந்த நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அதன் 100வது நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
கொரோனா தொற்று
சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாகவும், வருவாய் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றனர்.
உதவிக்கரம் நீட்டிய பிரபலங்கள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாயின்றி தவித்த ஏழை – எளிய மக்களுக்கு பல முன்னணி நடிகர், நடிகைகள் உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர்கள் கொரோனா நிவாரண நிதியை அரசாங்கத்திற்கு அளித்தாலும், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். குடிசைவாழ் மக்களுக்கு அன்றாடம் தேவையான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கொடுத்தனர். சிலர் உணவுப் பொட்டலங்களையும் விநியோகித்தனர்.
ஏழைகளுக்கு உதவி
அந்த வகையில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் 100 நாட்களாக சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகளையும், குடிநீர் பாட்டில்களையும் கொடுத்து உதவி செய்து வந்திருக்கின்றனர். சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் திருவிக நகர், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், மாதவரம், அயனாவரம், மூலக்கடை, புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளனர். இந்த உதவி 100 நாட்களை கடந்ததை தொடர்ந்து, அதனை அவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விக்ரம், விஷால் போன்ற உள்ளிட்ட நடிகர்களின் நற்பணி மன்றங்களின் சார்பில் பல மாவட்டங்களிலும், தொகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், உணவு பொருட்களையும் கொடுத்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.