நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் கடுமையான வார்த்தைகளைப் பேசி சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சர்ச்சை திருமணம்

திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன நாள் முதல் நடிகை வனிதா பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். திரையுலகினர் முதல் பொதுமக்கள் வரை வனிதாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கிவிட்டனர். தனக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வனிதாவின் திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவரும், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் விமர்சித்தனர். இதையடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மூக்கை நுழைத்த பிரபலங்கள்

இந்த விவகாரத்தில் தானாக மூக்கை நுழைத்த சில பிரபலங்களை நடிகை வனிதா சரமாரியாக விமர்சித்து வந்தார். விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் சமூக வலைத்தளங்களைப் பார்த்துதான் பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாதது தனக்கு தெரியும் எனவும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார். மேலும் படித்தவர்கள் யாராவது இப்படி செய்வார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை கடுமையாகப் பேசி கண்டித்தார். இதனால் அனைத்து டுவிட்களையும் டெலிட் செய்து, மன்னிப்பு கேட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவரைப் போலவே நடிகைகள் குட்டி பத்மினியும், கஸ்தூரியும் வனிதா குறித்து கருத்து தெரிவித்தனர்.

ஒருமையில் பேசிய வனிதா

இந்நிலையில், யூடியூப் சேனலின் நேரலையில் பங்கேற்ற லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. முதலில் சாந்தமாக பேசிய இருவரும், பிறகு எல்லை மீறி பேசினர். தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். தனது சொந்த விஷயத்தில் யாரும் தலையிடாதீர்கள் என்று வனிதா விஜயகுமார் பலமுறை கூறியும், அவர் சம்பந்தப்பட்ட விஷயத்தை பலர் பேசியது வனிதாவை பெருமளவு கடுப்பேற்றி வருகிறது. இதனாலேயே லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நடிகை வனிதா சண்டையிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here