கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை உள் தமிழகம் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 10 செ.மீ. மழையும், அவலாஞ்சி, சேருமுல்லை, வட்டாட்சியர் அலுவலகம், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. நடுவட்டம் 4 செ.மீ., கூடலூர் பஜார், சின்னக்கல்லார், மேல் பவானி ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக, கேரள கடலோரப் பகுதிகள், அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சுமார் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.