நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள திசை வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை வட கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் தலா 7️ செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கூடலூர் பஜார், வால்பாறை, சோலையார் பகுதிகளில் தலா 5 செ.மீ., மேல் பவானி, சின்கோனாவில் தலா 4️ செ.மீ., நடுவட்டம், எமரால்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அரபிக்கடல், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் ஜூலை 18 முதல் 22ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.