இந்தியா ஒன்றும் பலவீன நாடு அல்ல என்றும் இந்தியாவின் ஒரு இன்ச் நிலத்தைக்கூட எடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மோதல், பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவியது. பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன. இதன்தொடர்ச்சியாக சூசல் பகுதியில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ராஜ்நாத் சிங் ஆய்வு

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தனி விமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு சென்றார். அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே ஆகியோரும் சென்றனர். லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார். அதன்பின் ராணுவத்தின் டி-90 டாங்கிகள், பிஎம்பி கவசபோர் வாகனங்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையி்ட்டார்.

ஆவேசப் பேச்சு

அதன்பின் லூகங் பகுதியில் ராணுவ வீரர்கள், இந்திய – திபெத் வீரர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கிழக்கு லடாக் எல்லையில் நடந்த பிரச்சனை, எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பாக சீனாவுடன் இந்தியத் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்தப் பேச்சின் மூலம் அந்த எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படலாம் எனறும் கூறினார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தால் அதைவிடச் சிறந்தது வேறேதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா ஒன்றும் பலவீனமான நாடு அல்ல என்றும் இந்தியாவின் நிலப்பகுதியில் ஒரு இன்ச் பகுதியைக் கூட எடுக்க உலகில் எந்த சக்தியும் கிடையாது என்றும் ஆவேசத்துடன் கூறினார். இந்திய வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீணாக அனுமதிக்கமாட்டோம் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here