தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம்
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர், பல்வேறு வகையில் வளர்ந்து வரும் மாவட்டமாக ஈரோடு திகழ்வதாக புகழாரம் சூட்டினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் எனவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
திமுக மீது சாடல்
மேலும் அவர் பேசுகையில்; தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா தொற்றை தடுக்க முடியும். அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். பெருந்துறை பகுதி மக்களுக்கான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2020-21-ம் ஆண்டில் மேட்டூர் கால்வாயை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மின்கட்டண கணக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை. ஏதாவது காரணத்தை கூறி திமுக போராட்டம் நடத்தி வருகிறது. கொரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.