ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆடி வெள்ளி
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதமாகும். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம் இது. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாட்கள். அதேபோல், ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும், வழிபடுவதற்கும், பலன் பெறுவதற்கும் ஏராளமான விசேஷங்களும், வைபவங்களும் இருக்கின்றன. இவற்றில் மிக மிக முக்கியமானது ஆடி வெள்ளி.
விளக்கேற்றுவது பலன்
பொதுவாகவே, எந்த மாதத்தின் வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகள் எல்லாமே மகத்துவம் வாய்ந்தவை. இந்த ஆடியிலும் வெள்ளிக்கிழமையிலும் இன்னும் இன்னுமெனக் கனிந்துருகி, நமக்கெல்லாம் அருள்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதனால்தான் ஆடி வெள்ளி இன்னும் சக்தி மிக்க நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி மாதம் பிறந்துவிட்டது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. எனவே, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி நமஸ்கரியுங்கள். முடிந்தால், காலையிலும் மாலையிலும் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பது இன்னும் நல்ல நல்ல பலன்களையெல்லாம் தரும். மேலும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு செவ்வரளி சார்த்தி வழிபடுங்கள்.
நிம்மதி நிலைக்கும்
ஆடி மாதத்தில், இன்னும் கனிவும் கருணையுமாகக் காட்சி தருவதுடன் நம் சோகங்களையும் தீர்த்து வைக்கக் காத்துக்கொண்டிருக்கிறாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையிலும், அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி, கல்கண்டு சாதம், பால் பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து அம்பிகையை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தரித்திரம் விலகும், சுபிட்சம் பெருகும, நிம்மதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது உறுதி!