சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது காதலி மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா அரசியல்
சினிமா பின்புலம் உள்ள நடிகர், நடிகைகள் செய்யும் அரசியல் காரணமாக பலர் சினிமா வாய்ப்புகளை இழந்து வருவதாகவும், அதுபோலவே சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களில் 7 பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான அவர், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டே இருந்ததால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் முதல் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வரை சுஷாந்தின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
காதலி கோரிக்கை
சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், அவரது மரணத்திற்கு எந்த ஒரு நீதியும் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், பல முன்னணி நட்சத்திரங்களும் கொந்தளித்து வருகின்றனர். இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியான ரியா சக்கரபோர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்து ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது; சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலியான நான், அவரின் மரணத்திற்கான நியாயத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறேன். அவருக்கு ஏற்பட்ட திடீர் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருகிறன். ஆனால் ஒரு மாதம் கழித்தும் இதுவரை எந்த ஒரு நியாயமும் கிடைக்கவில்லை. தயவுசெய்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.