பாஜகவில் இணையும் எந்தஒரு திட்டமும் இல்லை என ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியலில் குழப்பம்
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். இதற்காக சச்சினை துணை முதல்வர் பதவியில் இருந்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமை அதிரடியாக நீக்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்படவில்லை. இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவுகிறது.
பாஜகவில் இணையும் திட்டம் இல்லை
இதனையடுத்து சச்சின் பைலட் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; நான் பாஜகவில் இணையப் போவதில்லை. பாஜகவில் இணையும் எந்தவொரு திட்டமும் என்னிடம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் இன்னும் காங்கிரஸை சேர்ந்தவன் தான். தனது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும். ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் நோட்டீஸ்
இதனிடையே, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், 2 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும் எனவும் கூறியுள்ளார்.