தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், தர்மபுரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

லேசான மழை பெய்யும்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குடியாத்தம் 5 செ.மீ., பந்தலூர் 4 செ.மீ., கொடைக்கானல், நிலக்கோட்டை, நடுவட்டம் , மேல் ஆலத்தூர், தேவலா, பொண்ணை, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வாலாஜா, வெம்பாக்கம், அவலூர்பேட்டை, கொரட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகிவுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஆந்திர கடலோர பகுதி, கர்நாடகா முதல் தெற்கு குஜராத் வரையிலான கடற்பகுதி, தென் மேற்கு, மத்திய மேற்கு கடற்பகுதி, மத்திய கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here